Morris – Oxford Car

ஊருக்கு போயிருந்த நேரம்..

கிளிநொச்சி நோக்கிய பயணம் என் நெருங்கிய நண்பர் ஒருவருடன் காரில்.

ஊருக்கு சென்றால் அதிகம் வெய்யில் வெக்கை இல்லாத நேரங்களில் கார் கதவு கண்ணாடியை இறக்கி ஊர் காற்றை உள்வாங்கியபடி இளையராஜா வின் இசையுடன் பயணிப்பது எனக்குபிடிக்கும்.

ஊர்க்காற்று உடலில் உரச எமது ஊரின் தனி அழகை ரசித்தபடி இருக்க எமது கார் தெருவோர பனை மட்டை அடைப்புகளையும் கிழுவங் கதியால் வேலிகளையும் கடந்து கொடிகாம சந்தியை அண்மித்து கொண்டிருந்தது.

அதன்போது எமக்கு வலதுபுறம் வெள்ளைநிற இந்த கார் ஒரு அழகான விசாலமான வீட்டின் றோட்டுப்பக்கவாசலில் நிறுத்தப்பட்டு ‘ஸ்ரார்டில்’ நின்றது.

அந்த கார் என் கவனத்தை கவர்ந்தது.

நான் எமது காரை றோட்டோரமாய் அந்த காரின் முன் நிறுத்திவிட்டு அந்த காருக்கு அருகில் சென்றோம்.

காரை வீடியோ பதிவுசெய்வதற்கு அனுமதியை பெற்றுக்கொண்டதன் பின்னர்.

வீடியோ பதிவு செய்தேன்.

எனக்கு இந்த காரின் விபரங்கள் பற்றி அதிகம் தெரியாது

அனாலும் இந்த வகையான கார்கள் எமது யாழ்ப்பாண மற்றும் வன்னி வாழ்வியலுடன் பின்னிபிணைந்தது.

நான் இந்தமாதிரியான காரில் எனது சிறுவயதில் அப்பா. அம்மா. அம்மம்மா உடனும்

பின் வன்னியில் இருக்கும் போது மாமாவுடனும் பயணித்து இருக்கிறேன்.

பருத்தித்துறையில் இந்த காரை வாடகைக்கு ஓட்டியே தமது வாழ்க்கையை நடத்தியவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.

80 களில் ஆடம்பர விழாக்களிலும் ,அலங்கார நிகழ்வுகளில் இது பங்குகொண்டு இருக்கிறது.

கிளாலி பயணத்தின்போதும் ஆட்களைஏற்றி இறக்கி இருக்கிறது.

கல்யாண அலங்காரத்துடன் புது மணத்தம்பதிகளை ஏற்றிக்கொண்டு மண்ணெண்ணையிலும் ஒடி இருக்கு.

பெற்றோலிலும் பாய்ந்து தன் வேகம் காட்டி இருக்கு,உள்நாட்டு யுத்தகாலத்தில் பேற்றோல் தட்டுப்பாட்டில்

மண்ணெண்ணையிலும் மூச்சுபிடித்துதன் சாதுரியம் செய்திருக்குகு

சரி,

காருக்கு அருகில் சென்று அங்கு அருகில் நின்றவருடன் கதைத்ததில் அவர் தான் காரைபராமரிப்பவர் என்றும் அதன் ஓட்டுனர் என்றும் அறிந்துகொண்டேன்.

இந்த கார் பற்றி சிறு கதை சொன்னார் அது.

அந்த காலத்தில் இளமையுடன் இருந்த ஒரு தம்பதிகள் இந்த காரை வாங்கியதாகவும். இப்போது அந்த ஐயா காலமாகிவிட்டார்.

தற்போது இந்தகாரில் வயது போன அம்மா அவரின் தனது கணவரின் பழைய ஞாபகங்களுடன் கிழமைக்கு ஒரு தடவையோ இரு தடவையோ காரில் ஏறி பயணிப்பதாகவும் கொடிகாமத்தில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் வரை சென்று அங்கு பிரசித்தமான கோயில்களுக்கும் பிரபலமான இடங்களுக்கு சென்றுவிட்டு திரும்புவதாகவும் கார் சரியான பராமரிப்புடன் இருப்பதாகவும் அவர் ஆர்வத்துடன் தெரிவித்தார்.

நானும் காரை சுற்றி பார்த்து ரசித்தேன். நாம் ஏன் இந்த காரை இப்பவும் இவ்வளவு ரசிக்கிறோம் என்று என்னையே நான் கேள்வி கேட்டுக்கொண்டேன்.

அதற்கு காரணம் அந்த காரை உற்பத்தி செய்தவர்களும் ரசித்து மிகவும் நேர்தியாக அந்த காலத்தில் இருந்த தொழில் நுட்பத்தை வினைத்திறனுடமும் கெட்டித்தனத்துடனும் பாவித்து உருவாக்கி உள்ளார்கள் என்பது புரிந்தது.

அது தான் இந்த கார் இன்று வரையும் எம்முடன் வாழ்கிறது. இப்பவும் அதன் மொழியில் பேசுகின்றது என்பது எனக்கு தெரிந்தது.

அதன் ‘Engine’ சத்தம் இன்றும் நல்ல நாதத்துடன் உள்ளது.

நாங்கள் நன்றி சொல்லிவிட்டு நாங்கள் காரை விட்டு நகர்ந்தோம். ஆனால் என் சிந்தனைகள் அந்த காரை விட்டு நகர சில நேரம் எடுத்தது என்பது உண்மை.

சரி இந்த கார் பற்றிய உங்கள் அனுபவங்களை ‘கொமன்ற்’ இல் எழுதுங்கள்.

அது சுவாராசியமான எமது கடந்த கால நினைவுகளை மீட்கும் என்பது எனது கருத்து…

எமது பயணங்களில் சாலைகளில் எம்மை பாதுகாப்பாக அழைத்து செல்லும் எமது சொந்த வாகனங்களை உணர்வு பூர்வமாக பாராமரிப்பதில் எனக்கு ஒரு அலாதிபிரியம்.

உங்களுக்கு எப்படீ ?

– எழுத்து –

– வி.நிஷாந்தன்.

www.vnishanthan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *