துவிச்சக்கர வண்டி

இடப்பெயர்வின் போது எங்களுடன் நீயும் சேர்ந்து
உன் இடுப்பெலும்பைமுறித்துகொண்டாய்.

நாம் ஒளித்து தவறணையில் கள்ளடிக்க
நீ படலையில் சாய்ந்து கண்ணடித்தாய்

உன்னில் ‘Dynamo’ கட்டி நாம் தேய்க்க
எங்களை ‘ BBC’ கேட்கவைத்தாய்

கால் வலிக்கஉன்னைசுத்தி
இளையராஐவை வீட்டுக்கு கூப்பிட்டோம்.

நீ கழுதையாகி விறகு சுமந்து
வீட்டில் அடுப்பு எரிய வைத்தாய்.

செல்லுக்கும் பொம்பருக்கும் தப்ப
தெருவோரமாக சேர்ந்து படுத்தாய் நீ.

தூரப்பயணம் உன்னுடன் துக்கமின்றி
சேர்ந்தே சென்றோம்.

கிளாலி பயணத்தில் கிளுகிளுப்பாக
நீயும் சேர்ந்தாய்.

குடும்பத்தோழன் ஆகி நீ
குடும்பத்தையே தோழில் சுமந்தாய்.

கோயிலோ,குளமோ, கெட்டதோ, நல்லதோ
எங்கள் கையுடனும் காலுடனும்ஒட்டிக்கொண்டாய்.

வீட்டில் இருந்து சுடலை வரை
கூடவே வந்தாய்.

உன்னை மிரித்து நீ தேய
ஆரோக்கியம் நாம் ஆனோம்.

வீட்டுக்கு ஒன்றோ இரண்டோ,
வழித்தெய்வமாய் நீ இருந்தாய்.

விறகு சுமந்த, மண்ணெண்ணைய் வித்து
குடும்பம் வாழ வைத்தாய்.

கன்னியர் உன்னில் ஏறிமிதிக்க
கண் குளிர நாம் ரசித்தோம்.

உன்னில் ஏறி காதல் செய்தோம்
தடக்கி விழுந்து தெருவும் தொட்டோம்.

உன்னைப் பழக தெருவோர சுவர் முட்டி
சும்மா நின்று மாட்டுக்கும் இடித்தோம்

சண்டைக்கும் உன்னில் சென்றோம்
சமாதானத்துக்கும் உன்னில் வந்தோம்

மாற்றம் ஒன்றே மாறாதது.

உனக்கு இப்ப ஓய்வுகாலம்
நல்லா ஓய்வெடு!!!

ஆனால்

வாழ்க்கை ஒரு வட்டம்
மீண்டும் உன் காலம் வரலாம்.

யார் கண்டார்?

எழுத்து
வி.நிஷாந்தன்

www.vnishanthan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *