நாகர்கோயில் முருகையாகோயில் விளம்பர வேலைத்திட்டம் அது.

பின்னேரம் ஒரு 4 மணியிருக்கும்.

எமது வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டோம்.

வாகனத்தின் A/C இனை OFF பண்ணி, கண்ணாடிகளை இறக்கி விட்டிருந்தோம்.

அந்தி நேரம் சுத்தமான அந்த கிராம காற்று இதமாக இருந்தது.

கிராமப்புற தெருக்கள் ஊடாக எமது வாகனம் நகர்ந்தது,

செந்நிறமான தெருக்களையும்,

 

பனை மட்டையால் அழகாக வரிசையாக அடுக்கி அடைக்கப்பட்ட வேலிகளையும்

பனை ஓலையால் வேயப்பட்ட கூரைகளையும் ரசித்தபடி நான் இருந்தேன்.

வாகனம் வேகமேடுத்து ஓட ஆரம்பித்தது. எம்மோடு இருப்பவர்

ஒருவரை கொழும்பு செல்லும் பஸ்ஸில் ஏற்றவேண்டியிருந்தது.

சிறிதுநேர பயணத்தின் பின்னர் வாகனம் ஒரு ஒழுங்கையில் திரும்பியது

அங்கு கோயிலுக்கும் ஒரு சிறு ஒழுங்கைக்கும் இடையில் இருந்து ஒரு சிறுவெளியில்

சிறுவர்கள் சிலர்

– பேணிப்பந்துவிளையாடினார்கள்,

– சிலர் சைக்கிள் (Push Cycle) பழகிக்கொண்டு இருந்தார்கள்,

– சிலர் சைக்கிள் றிம்மினை(Cycle Rim) உருட்டி அதன்பின்னால் ஓடிக்கொண்டு
இருந்தார்கள்.

சிலர் இரு குழுக்களாக பிரிந்து பேணிப் பந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.

அவர்களை பார்த்ததும் எனக்கு இரத்தம் பரபரத்தது.

நாங்கள் ஊரில் பேணிப்பந்து விளையாடிய நினைவுகள் என் கண்முன் முண்டியடித்து பசுமையாய் விரிந்தன.

சிறுவர்களை பார்த்து கை காட்டிபடி வாகனத்தை நிறுத்த சொன்னேன்.

நாம் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.

என் உணர்வுகளை புரிந்து கொண்டு சிறுவர்களை சுற்றிவந்து காரை சடுதியாய் நிறுத்தினார்.

செம்புழுதியை கிளப்பியபடி கார் ‘சடார்’ என்று நின்றது.

 

நாம் Sony FS 700 ம் Caonon 6D ம் மற்றும் Drone உடன் இறங்கினோம்.

காரின் சடுதியான வருகையும், அது நின்ற விதமும், கிளப்பிய செம்புழுதியும்.

பரீட்சயமில்லா எமது முகங்களும்

எமது கையில் இருந்த கமராக்களும்

சிறுவர்களை கலவரப்படுத்தியது.

நாம் அவர்களை சுற்றி வளைத்து கொண்டோம்.

அவர்கள் இன்னும் பரபரப்பானார்கள்.

அவர்களுக்கு எங்களை பற்றியும் நாங்கள் பதிவு செய்யபோவதை பற்றியும் அவர்களுக்கு அவர்கள் விளங்ககூடியவாறு சொன்னேன்.

உடனே

அவர்களில் சிலர் வெட்கப்பட்டுக்கொண்டார்கள், சிலர் சந்தோசத்தில் துள்ளி குதித்தார்கள். சிலருக்கு உண்மையில் ஓன்றும் விளங்கவில்லை. அதை நான் ரசித்தேன்.

அனால் எமக்கோ நேரம் மட்டுமட்டாக இருந்தது.

எந்த ஒரு ‘Script’ஓ, Shot list ஓ Story board ஓ கையில் இல்லை, முன் ஆயத்தம் சுத்தமாக இல்லை.

இருள் எம்மை நெருங்குகிறது. நேரம் எம்மை துரத்துகிறது.

நண்பர்கள் கமராவுடன் தயாரானார்கள்.

சிறுசுகளுக்கு என்னன்ன செய்யவேண்டும் என்பதை அப்போது எனக்கு தோன்றியவற்றை சொன்னேன்.

செயல்படுத்தினோம்.

நண்பர்களின் கமராவுக்கு முன் சிறுசுகளின் நடவடிக்கைகளை நான் பார்த்துக்கொண்டு
நின்றபோது

எனது நினைவுகள் நீந்த தொடங்கின…. நாம் அன்று பேணிப்பந்து விளையாடிய இடங்களுக்கு என்னை அழைத்துச்சென்றது.

பேணிப்பந்தினை நாங்கள் அன்று ‘புளிச்சல்’ என்றும் சொன்னோம்,

ஏனென்றால் இரு குழுக்களாக பிரியும் அணிகள் அடுக்கி இருக்கும் பேணிகளை பந்தால் குறிபார்த்து மாறி மாறி எறிய வேண்டும் பேணிகளை தகர்க்கும் அணி பேணிகளை தூக்கி கொண்டு ஓடுவார்கள். அப்போது மற்ற அணி பந்தை கையில் எடுக்கும். மற்றைய அணி பேணிகளை கையில் எடுத்துக்கொண்டு ஒடி நிலை எடுக்கும்.

பந்து அணி, பேணி அணியை பந்தால் குறி வைத்து தாக்கும்;, பேணி அணி பந்தை தாம் கைப்பற்றிய பேணியால் தமது உடம்பில் பந்து படாமல் தடுக்கவேண்டும்.

பந்து உடம்பில் பட்டால் அவர் ‘அவுட்’ அவர் விளையாட்டில் இருந்து வெளியேறுவார்.

கடைசி ஆள் அவுட் ஆகும் வரை ஆட்டம் தொடரும்.

எக்கச்சக்கமாக மாட்டுப்ட்டால் எதிரணி வேகமாக குறிபார்த்து எறியும் பந்து முதுகில் பட்டு புளிக்கும். சிறிது நேரம் தோல் விறைத்துப்போகும்.

அதனால் அதனை ‘புளித்தல்’ என்று அழைத்தோம் அப்போது.

அன்று….. அது 1995 காலப்பகுதி.

Mobile Phone வராத காலப்பகுதி.

சிறிய காணிகளிலும், பெரிய முத்தம் கொண்ட வீடுகளிலும் பேணிப்பந்து விளையாடினோம்.

நேரம் போவது தெரியாது.

சட்டை ஊத்தையாவது பற்றி கவலை இல்லை.

கறள் பிடித்த பேணி வெட்டிய காயம் விளையாடும் போது தெரியாது. இரத்தம் வழியும் போதுதான்
விளங்கும்.

பள்ளிக்கூடம் விட்ட பின்பும், ரீயுசன் தொடங்கும் முன்பும் பேணிப்பந்து விளையாட்டுத்தான்.

அன்று Fan உம் இல்லை, A/C உம் இல்லை வியர்வை உடம்பு சூட்டில் காய்ந்து அடித்த காற்றில் கரைந்தது.

விளையாடி ஒருவனுக்கு காயம் ஏற்றபட்டால் நண்பர்கள் எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டோடினோம். படிக்கும் ஆசிரியரும் அன்பினால் ஏங்கி அடித்து ஓடிவந்தார்.

அப்போது நல்ல ஆசிரியர்கள் நிறையபேர் இருந்தார்கள்.

படிப்பிப்பதை ஒரு தொழிலாக செய்யவில்லை.

படிப்பிப்பதை ஒரு வாழ்க்கையாக வாழ்ந்தார்கள்.

ஆசிரியர்களை தேடி அவர்களின் வீடுகளுக்கு நாம் சென்றோம்.

எனது நினைவு நீண்டபோது சயிக்கிள் ‘பெல்’ சத்தம் என் கவனத்தை திருப்பியது.

திரும்பி பார்த்தேன் எனது நண்பர்கள் சிறுவர்கள் சயிக்கிள் பழுகுவதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

எனது நினைவு மீண்டும் நாம் சயிக்கிள் பழகிய காலத்திற்கு சென்றது.

அப்பா என்னுடனே ஓடி தன் சயிக்கிளை பிடித்து எனக்கு சயிக்கிள் பழக்கியது ஞாபகத்தில் வந்தது.

சயிக்கிள் பழுகும் காலத்தில்…..

– எத்தனை சுவருக்கு சயிக்கிளால் இடித்திருப்போம்.

– எத்தனை மாட்டுக்கு இடித்திருப்போம்..

– எத்தனை ஆடுகள் எங்கட ஓட்டத்தை பார்த்து ஒதுங்கி இருக்கும்.

– எத்தனை வயது போனதுகளுக்கு இடித்து தூசனத்தால் பேச்சு வாங்கிஇருப்பம்.

– எத்தனை தரம் சயிக்கிளால் விழுந்து றோட்டை முத்தமிட்டு இருப்பம்.

– தெரிஞ்ச ஆட்களுக்கு சயிக்கிளால் இடித்து முழிச்சிருப்பம்.

– அத்தனை ஞாபங்களும் அப்ப வந்து போனபோது….

கொழும்புக்கு போகவேண்டிய நண்பர் ‘வெளிக்கிடுமே?’ என்றார்.

அவசரத்தில் என் ஆர்வ கோளாறால் எடுத்த வீடியோக்களில்; பல தவறுகள் உண்டு…அது எனக்கு தெரியுது.

யோசித்தேன்.

என் Hard Disk இல் நான் மட்டும் பார்க்க இருந்து என்ன பயன்?

எல்லோரும் பார்க்கட்டுமே…. அவர்களும் பழைய நினைவுகளை மீட்கட்டுமே…

உங்களுக்கு எப்படி? நீங்கள் சொல்லுங்கள் !!!

– எழுத்து –
வி.நிஷாந்தன்
www.vnishanthan.com

குறிப்பு – கீழ் இருக்கம் youtube link ஐ கிளிக் செய்து
வீடியோவை பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=PGVrrHWKmfY

Total Page Visits: 437 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *