Part -1

https://www.youtube.com/watch?v=JHm_ImWygWo

Part – 2

https://www.youtube.com/watch?v=Mqy7bMdk4e0&t=22s

அது ஒரு சனிக்கிழமை மதியம் 11மணி இருக்கும். வெயில் வெளுத்து வாங்கியது.

நாகர்கோவிலுக்கு சென்றிருந்தோம்

புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கோயில் கட்டுமானங்களை பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து அதன்மூலம் வெளிநாட்டு உதவியை பெறுவது சம்பந்தமான வீடியோ தொகுப்பு செய்வதற்காக.

அது ஒரு சிறிய வேலைதிட்டம் அதனால் மூன்று கமராக்கள் இரண்டு வேலைக்கு

ஒன்று Extra.

இரண்டு நண்பர்கள் கமராவுக்காக ஒருவர் உதவியாளர் என்னுடன் சேர்த்து நாம் நால்வர்.

இரண்டு நாள் முழுநேர வேலைத்திட்டம் அது.

இரண்டாம் நாள் நடுவில் கிட்டதட்ட இரண்டரை மணிநேர ஓய்வு கிடைத்தது.

என்னுடன் வந்தவர்களை ஓய்வெடுக்க அனுப்பியிருந்தேன்

எமக்கு அங்கு ஒரு வீட்டை ஒழுங்கு செய்து தந்திருந்தார்கள்.
நல்ல உபசரிப்பு. நல்ல மனிதர்கள். எல்லோரும் ஒரே மாதிரி பழகுகிறார்கள்.

கிடைத்த ஓய்வு நேரத்தில் மனதுக்கு பிடித்ததை பதிவு செய்யலாம் என்று யோசித்து.

ஒரு கிராம கள்ளு கோப்பரேசனை எந்த வித முன் ஆயத்தமும் இல்லாமல் அப்படியே வீடியோ பதிவு செய்யலாம் என முடிவேடுத்தேன்.

எமது குழுவினருக்கு யாருக்கும் எதுவும் இதைப்பற்றி சொல்லவில்லை.

அந்த ஊரில் எமக்கு வழிகாட்டவும் வசதிகள் செய்துதரவும் ஒரு வயது முதிர்ந்த ஐயா ஒருவர் எம்முடனே இருந்தார். அவருக்கு வயது கிட்டதட்ட எண்பதுக்கு மேல்.

அவரின் நெற்றி மட்டுமல்ல, உடம்பு முழுவதும் திருநீறும் சந்தனமுமாக இருந்தது பழுத்த ஆன்மீக பழமாக இருந்தார்.

நல்ல கருத்த நிறம், வழமைக்கு மாறான குள்ள உருவம். ஊர் மக்கள் பலர் அவருடன் மரியாதையுடன் நடந்துகொண்டார்கள்.

ஆனால் என்னுடன் மட்டும் ஆன்மீகம் பேசி என் காதுகளை கடித்து துப்பியிருந்தார்.

அவரின் வயது காரணமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தேன். எதிர்பேச்சு எதுவும் பேசாமல்

ஆனால் மனசுக்குள் பொங்கி, பொருமிகொண்டிருந்தேன்.

நான் அவர் முன் பம்மி பதுங்குவதையும் பார்த்து
என் குழுவில் சிலருக்கு சிரிப்பு நக்கலாக நான் படும் அவஸ்தையை பார்த்து

மதியம் உணவு வேளை நெருங்கும் நேரத்தில் அவரை தனியாக கூட்டிக்கொண்டுபோய் சற்றுதள்ளி.

அவரிடம் என் விருப்பத்தைசொன்னேன்.

“ என்ன தம்பி கோப்பரேசனை வீடியோ எடுக்கபோறியோ?

உனக்கு என்ன விசரே ”

“ அவங்கள் எல்லாம் ரவுடியள் அடிப்பாங்கள் ”

“ வெறியில குத்துவாங்கள் ”

“ உந்த கமராவை எல்லாம் உடைப்பாங்கள் ”

“ கல்லால தூக்கியெறிவாங்கள் ”

“ மைக்கை மரத்தில குத்தி உடைப்பாங்கள் ”

“ உனக்கு அவங்கள பற்றி தெரியாது ”

“ கோப்பரேசனுக்கு நீ போறது என்றால் வாகனமும் உனக்கு தரமாட்டன் வாகனத்தையும் கல்லால எறிஞ்சு உடைத்து போடுவாங்கள்”

“ உவங்கள பற்றி உனக்கு தம்பி தெரியாது ”

“ சொல்லீட்டன் நீ கொழும்பில் இருந்து வந்து இஞ்ச இவங்களிட்ட அடி வாங்காதே தம்பி ”

சற்று சத்தமாவே சொன்னார்

உணர்ச்சிவசப்பட்டு தொடர்ந்து அவர் கதைத்தால் அவருக்கு மூச்சுவாங்கியது.

அவர் புரிந்துகொண்டதை தனக்கு தெரிந்தவாறு வெளிப்படுத்துகிறார்.

அவருக்கு அமைதியான ஆன்மிகத்தில் பிடிப்பு

எனக்கு பரபரப்பாக பதிவு செய்வதில் பிடிப்பு.

ஒத்து போகாத சிந்தனைகள் நேருக்கு நேர்
சந்தித்தால்

பொறியும் புகையும் பறப்பது வழமைதானே

இது ஒன்றும் புதிது இல்லையே……எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

கோயிலில் அவருக்கு முன் மண்டையை ஆட்டிவிட்டு.

சற்று நகர்ந்து போய் என் போனை எடுத்து.

என்னுடன் வந்தவரை அழைத்து ஒரு Three Wheel (Auto) ஒன்றை நாங்கள் ஓய்வு எடுக்கும் இடத்திற்கு நேரடியாக வரும் படி சொன்னேன்.

நாம் ஓய்வேடுக்கும் இடத்திற்கும் கோயிலுக்கும் கிட்டதட்ட அரை கிலோமீற்றர் தூரம்.

நான் கோயிலில் இருந்து நடந்து வரவும் Three Wheel (Auto) வரவும் சரியாக இருந்தது.

எல்லா ஒளி மற்றும் ஒலி பதிவு கருவிகளை ஏற்றினோம.; Three Wheel (Auto) Driver என் முகத்தை பார்த்தார்.

தூரத்தை பற்றி பிரச்சனை இல்லை பரபரப்பான பழைய கள்ளு தவறனைக்கு போக சொன்னேன்.

எல்லோரும் பரபரப்பானார்கள்.

‘எல்லாத்துக்கும் நான் பொறுப்பு நீங்கள்
கலவரப்படவேண்டாம்” நான் சொன்னேன்.

மூன்று Full HD Highend Cameras, Professional Wirelss Mics & Supportive Equipments குறைந்தது அதன் பெறுமதிகள் மொத்தமாக எட்டு லட்சத்தை தாண்டும் அண்ணளவாக.

நான் நினைப்பது சரியாக அமைந்தால்; நல்ல பதிவாக அமையும் அது நிச்சயம்.

தற்செயலாக அது தலைகீழாக போனால் நண்பர்களையும், கொண்டு செல்லும் உபகரணங்களையும் திரும்ப கொண்டு வரும் மனவலிமையும், உடல்வலிமையும் என்னிடம் போதுமானதாக இருந்தது.

எது நடந்தாலும் முகம்கொடுப்போம் என்ற எண்ணத்துடன் Three wheel இல் ஏறினேன்.

புழுதி படிந்த குண்டும் குழியுமாக இருந்த சாலையில் ஒரு மணிநேரம் ஓடி ஒரு கள்ளு தவறனையை அடைந்து ஒரு பெரிய வேப்ப மரநிழலில் வாகனம் ஓய்வானது.

வாகனத்தில் இருந்து ஐம்பது மீற்றர் தூரம் முன்னுக்கு பிரதான தெருவில் இருந்து வலது பக்கமாக ஆரம்பிக்கும் ஒரு ஒற்றையடிப்பாதையை காட்டி வாகன சாரதி சொன்னார்

‘இதால் போனா முன்னுக்கு தவறனை” என்றார்

முதலில் Camera களுக்கும் Mic களுக்கும் Battary களின் Charge level களை பார்த்து மாத்த சொன்னேன்.

Mobile களை Alert ஆக கையில் வைத்திருக்க சொல்லிவிட்டு,

நான் மட்டும் வாகனத்தில் இருந்து சிறு சிறு பற்றைகளை பக்கமாக கொண்ட ஒற்றையடி பாதையூடாக தவறனையை நொக்கி நடந்தேன்.

ஒரு பத்து மீற்றர் தூரத்தில் தகரத்தால் ஆன மறைப்பு 5 அடி இடைவெளிவிட்டு அதை தாண்டி நான் நடந்தேன்

அங்கு பனைமரங்களிற்கு கீழ் ஒரு சிறிய கடைமாதிரி அமைப்பு அதற்கு முன்பாக நீளும் சீற்றினாலான கூரை அதன் கீழ் வெள்ளை மணல் பரவி சுற்றி கல் அடுக்கப்பட்டிருக்கிறது.

அதன் கீழ் ஆறு பேர் அமர்ந்து கள்ளுக்குடித்துக்கொண்டு இருந்தார்கள். சிலர் பனைக்கு கீழ் நின்று கதைத்துக்கொண்டு நின்றார்கள்.

கடையின் ஒரு பக்கம் கதவுடன் கூடிய யன்னல் கள்ளை வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்க

மறுபுறும் கள்ளை கொள்வனவு செய்ய ஒரு வாசல் இருந்தது. அதற்கு முன் ஒரு வாகனம் பெரிய கள் கொள்கலன்களுடன் நிற்கிறது.

அங்கிருந்த முகாமையாளர் கள்ளின் தரத்தை வாகனத்தில் வைத்தே பரிசோதித்து கொண்டு இருக்கிறார்.

இதுகளை எல்லாம் தாண்டி நான் செல்கிறேன். எல்லாவற்றையும் அவதானித்தபடி சகஐமாக

அனால் எனக்கு இவை எல்லாம் புதுசு. அதை நான் வெளிகாட்ட முடியாத நிலை

எல்லோரும் என்னை அன்னியமாக பார்க்கிறார்கள் முகாமையாளர் உட்பட அது எனக்கு விளங்குது நான் யாரையும் பார்க்கவில்லை.

என்னை கண்டதும் சந்தேகத்தோடு மனேஐர் ஊழரவெநச க்கு போகிறார் பக்க கதவு வழியாக.நான் அவரை தாண்டி நடந்து போய் கள்ளு குடித்துக்கொண்டிருப்பவர்களை கடந்து Counter க்கு சென்றேன்

மனேஐர் இப்ப Counter க்கு வருகிறார்.

நூறு ரூபாவை கொடுத்து.

‘ஒரு போத்தல் கள்ளு தாங்கோ”

இருபது ரூபா மிச்சத்துடன் பிளாஸ்ரிக் போத்தலில் கள்ளு தரப்படுகிறது எனக்கு.

எடுத்துக் கொண்டு வந்து அமர்கிறேன் அவர்களுடன்.

எல்லோர் பார்வையும் என் பக்கம் திரும்புகிறது.

அவர்கள் என்னை கேள்வி கேட்க முன்னமே நான்.

‘ஐயா நான் கொழும்பில இருந்து வந்தனான் ஒரு
வேலை அலுவலா இஞ்ச, கள்ளு குடிக்கவேணும் போல ஆசையா இருந்தது அதான் இஞ்ச வந்தன் உங்களோட என்னை சேர்த்துக்கொள்ளுங்கோ” எண்டன்.

என் வேலையை பற்றி கேட்டார்கள்

சொன்னன் சுருக்கமா.

அதன்பிறகு நான் கேட்டன்.

‘ஐயா உங்களுக்கு ஆட்சேபனை இல்லை எண்டால் உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் என்ர காசிலை இருண்டு போத்தல் கள்ளு வாங்கி தரட்டே எல்லாரும் சேந்து குடிப்பம் எண்டன்”

சிலர் சந்தோசமாக சம்மதித்தார்கள்

சிலர் பேசாமல் இருந்தார்கள்

சிலர் ‘உனக்கு ஏன் தம்பி சிரமம்” என்றார்கள்.

சிலர் என்னை சந்தேகத்தோடு பார்த்ததையும் அவதானித்தேன் (உசார் Party)

இருபது போத்தல் கள்ளுக்கு நான் மனேஐருக்கு அங்கு கள்ளு குடித்துக் கொண்டிருந்தவர் ஊடாக பணம் கொடுத்தேன்.

உடனடியாக எல்லொருக்கும் ஒரு போத்தல் கள்ளு கொடுக்க சொன்னேன்.

கொடுக்கப்பட்டது.

நன்றி சொல்லிவிட்டு குடித்துக்கொண்டிருக்க

எனது மனைவியின் பேத்தியார் அங்கு பக்கத்து ஊரில் ஒரு அரசாங்க பள்ளிகூடத்தின் அதிபராக இருந்தவர் அவரை கிட்டதட்ட எல்லோருக்கும் தெரியும்.

அதையும் சொன்னேன் என்னுடன் இன்னமும் நெருக்கமானார்கள்.

அவர்கள தங்கள் நண்பர்களை போன் பண்ணி உடனே வர சொல்லி அழைத்தார்கள். கள்ளு குடிக்க.
அவர்களும் வந்தார்கள்.

இப்போ கிட்டதட்ட அரை மணிநேரம் கழிந்திருக்கும். எல்லோரும் ஒண்டரை போத்தல் கள்ளு குடித்திருந்தார்கள்.

கள்ளு இப்ப கதைக்க ஆரம்பித்திருந்தது.

பாட்டாகவும் வெளிப்பட தொடங்கி இருந்தது.

தாளுமும் போட்டது.

நடனமும் நடந்தது.

அவர்கள் பதினைந்து பேராக பெருகி இருந்தார்கள்.வயதுவேறுபாடு இன்றி.

இப்ப நான் அவர்களிடம் கேட்டேன்

‘நாங்கள் இதை வீடியோ எடுத்தால் என்ன”

‘அது சரி தம்பி சொல்றது சரிதான் எடுத்தாப்போச்சு” என்றார்கள்

மனேஐரிடம் போய் உண்மை விசயத்தை சொன்னேன்

ஒரு பதிவுக்காக மட்டும் என்றேன்.

‘ எங்களுக்கு பிரச்சனை வராமல் எடுங்கோ ” என்றார்
.

எங்கட குழுவுக்கு போனை போட்டன்

‘ Three wheel ஐ அப்படியே நேரா உள்ள விடுங்கோ ” என்றேன்.

அதன் பின் நடந்ததை வீடியோவில் பாருங்கோ…..

போதும் என்றும் நாம் சொல்லும் வரை பாடினார்கள்.

ஆடினார்கள், பேசினார்கள்.

புறப்படும் போது வாசல் வரை வந்து வழியனுப்பினார்கள்

பாசத்துடனும் தமிழன் என்ற பண்புடனும்

நான் நெகிழ்ந்து போனேன்.

வாகனம் நகர்ந்தது.

உண்மையான ஒற்றுமையையும்,

நட்பின் அரட்டையையும்,

போலியில்லாத மெய்யான முகங்களையும்,

பூசி மொழுகாத பேச்சையும்,

அங்கு கேட்டேன், பார்த்தேன்.

குறிப்பு – மனேஐரின் வேண்டுகோளிற்கு இணங்க தவறணை அமைந்த இடத்தை நான் இங்கு குறிப்பிடவில்லை.

ஆனால் நீங்கள் கண்டுபிடித்து சொல்லுங்கோவன் பார்ப்பம்?

எழுத்து புது பதிவு.
வீடியோ மறு பதிவு.

– எழுத்து –
வி.நிஷாந்தன்
www.vnishanthan.com

Total Page Visits: 175 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *